சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்க கரசங்கால் கிராமத்தினர் கோரிக்கை
அச்சிறுபாக்கம்:கரசங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் தெருவில், சிறிய பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரசங்கால் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்தாண்டு இப்பகுதியில், தெருவின் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் கலவையால் தடுப்பு அமைத்து, சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், இப்பகுதியில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியது. குடியிருப்பு பகுதியில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால், சாலையில் இருந்த சிமென்ட் கல் பெயர்த்தெடுக்கப்பட்டு, தற்காலிகமாக மழைநீர் வடியும் வகையில் கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. இதனால், இருசக்கர வாகனங்கள், இந்த வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, சாலையின் குறுக்கே சிறிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.