தொழில் உரிமங்களை புதுப்பிக்க கூடுவாஞ்சேரி கமிஷனர் உத்தரவு
கூடுவாஞ்சேரி,நந்திவரம் - கூடுவாஞ்சேரியில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் வைத்து வணிகம் செய்வோர், தங்களின் தொழில் உரிமங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என, நகராட்சி கமிஷனர் ராணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. இங்கு செயல்பட்டு வரும் நிறுவனங்கள், வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் என, அனைவரும் தொழில் உரிமங்களை நகராட்சியில் விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும்.ஏற்கனவே பெற்றவர்கள், ஒவ்வொரு ஆண்டும், முறையாக கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காதவர்கள் மற்றும் புதிய தொழில் உரிமங்களை பெறாதவர்கள், நகராட்சி அலுவலகத்தில், சுகாதார அலுவலர் நாகராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோரிடம், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு இரண்டு முறை நினைவூட்டல் கடிதம் நேரில் வழங்கப்படும்.அப்போதும், அவர்கள் தொழில் உரிமங்களை பெறாமலோ அல்லது புதுப்பிக்காமலோ வணிகம் செய்து வந்தால், கடையை பூட்டி சீல் வைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2,100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன. அவற்றில், தற்போது வரை, 500 நபர்கள் தான் தொழில் உரிமத்தை புதுப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.