மதுபானம் கடத்திய வழக்கு சாராய வியாபாரிக்கு 2 ஆண்டு சிறை
செங்கல்பட்டு:மதுபானம் கடத்திய வழக்கில், கள்ளச்சாராய வியாபாரிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த தாழங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன், 44; சாராய வியாபாரி.கடந்த 2022 பிப்., 14ம் தேதி, கூவத்துார் அடுத்த பரமண்கேணி பாலம் பகுதியில், மாருதி சுசுகி டிசையர் காரில் வேகமாக சென்றார்.மாமல்லபுரம் மதுவிலக்கு போலீசார் காரை மடக்கி சோதனை செய்த போது, மொத்தம் 624 மதுபாட்டில்கள் மற்றும் எரி சாராயம் கலந்த பாட்டில்கள் ஆகியவை சிக்கின. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து, கங்காதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கங்காதரனுக்கு இரண்டு ஆண்டுகள் மெய்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால், ஒரு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.