ஊரப்பாக்கத்தில் சுகாதார மையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 692 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு, 15 வார்டுகளில், 434 தெருக்களில், 80,000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாகவும், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகவும் உள்ள ஊரப்பாக்கத்தில், ஆரம்ப சுகாதார மையம் இல்லை.இதனால் ஏழை மக்கள், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சிறு உடல் பாதிப்பிற்கும், தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் சிகிச்சை எடுக்க வேண்டி உள்ளது. இதனால், ஊரப்பாக்கத்தில் சுகாதார மையம் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:உலக சுகாதார மையம், 25,000 நபர்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என, வரையறை செய்துள்ளது. அதன்படி கணக்கிட்டால், ஊரப்பாக்கத்தில், மூன்று ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒன்றுகூட இல்லை.தற்போது, அருகில் உள்ள கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்திற்கே பகுதிவாசிகள் சிகிச்சைக்காக செல்கின்றனர். கர்ப்பிணியர், முதியோர் கூடுவாஞ்சேரி சென்றுவர நேரம், பணம் விரயமாகிறது.தவிர மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை, கர்ப்பிணியர் பெறுவதில் சிரமம் எழுந்துள்ளது. மேலும், வீடு தேடி மருத்துவ திட்டத்தின்படி, சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் உள்ளது.எனவே, 80,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, தமிழக அரசின் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.