உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லபுரம் சிற்பக்கலை துாண் பராமரிப்பின்றி பாழாகும் அவலம்

மாமல்லபுரம் சிற்பக்கலை துாண் பராமரிப்பின்றி பாழாகும் அவலம்

மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், கற்சிற்ப புவிசார் குறியீடு சிற்பக்கலைத் துாண், முறையாக பராமரிக்கப்படாததால் சீரழிகிறது.மாமல்லபுரத்தில், பல்லவர் கால கற்சிற்பங்கள் உள்ளன. பல்லவ மன்னர்கள் உருவாக்கிய கற்சிற்ப கைவினைத் தொழில், தற்காலத்திலும் இங்கு சிறந்து விளங்குகிறது.

கற்சிற்ப புவிசார் குறியீடு

இத்தொழில் சிறப்பு கருதி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனம், உலக கற்சிற்ப நகர புவிசார் குறியீடு அங்கீகாரத்தை, உலக கலாசார அமைப்பிடமிருந்து, கடந்த 2018ல் பெற்றது.இத்தகைய சிறப்பின் அடையாளமாக, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், இங்கு புறவழி சந்திப்பு நுழைவாயில் பகுதியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 அடி உயர அளவில், சிற்பக்கலைத் துாணை, கடந்த 2022ல் அமைத்தது. துாணில், 12 யானைகள், தலா நான்கு வீதம், சிங்கங்கள், தோகை விரித்த மயில்கள், தாமரை மலர் ஆகிய கலைநயமிக்க சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. காண்போரை கவரும் வகையில் இந்த துாண் அமைந்துள்ளது. இரவிலும் கவர, பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கற்சிற்ப புவிசார் குறியீடு சிறப்பிற்காக அமைக்கப்பட்ட இதை, சிற்பிகளை கொண்டு பாறைக்கல்லில் வடிக்கவில்லை. தனியார் நிறுவனம் வாயிலாக, கான்கிரீட் அடித்தளம், துாண் ஆகியவற்றை அமைத்து, 'பைபரில்' செய்யப்பட்ட சிற்பங்கள் இணைக்கப்பட்டன. பாறைக்கல்லின் வண்ணம் தீட்டப்பட்டது. சிற்பக் கலைஞர்களின் எதிர்ப்பையும் மீறி, அரசு அவ்வாறு அமைத்தது.

வலியுறுத்தல்

மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், சர்வீஸ் சாலை ஆகியவற்றுக்கு, இத்துாண் இடையூறாக அமையும் என்பதால், அதை வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தியும், அப்பகுதியில் வீம்புடன் அமைக்கப்பட்டது.துாணை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்ட சூழலில், தமிழக அரசின் வேண்டுகோளால், துாணிலிருந்து சற்று மேற்கில், குளம் பகுதிக்கு பாலம் மாற்றப்பட்டது.இத்தகைய துாணை பூம்புகார் நிறுவனம், துவக்கத்தில் பராமரித்தது. நாளடைவில் பராமரிப்பு கேள்விக்குறியாகி, சிலைகளில் தீட்டிய பெயின்ட் உதிர்ந்து சீரழிகிறது. அதில், புழுதியும் படிந்துள்ளது. அடித்தள புல்வெளியும் புதராக மாறியுள்ளது; விளக்குகளும் ஒளிர்வதில்லை. எனவே, இத்துாணை பராமரித்து பொலிவுபடுத்த வேண்டுமென, கலை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ