ஆசிரியர் கண்டித்ததால் மாயமான மாணவர் மீட்பு
பம்மல்:பம்மல் அடுத்த அனகாபுத்துாரில், வேல்ஸ் வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இதில், அனகாபுத்துாரைச் சேர்ந்த சாய் ஹரிவர்ஷன், 14, என்ற மாணவர் 10ம் வகுப்பு பயில்கிறார்.பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, நேற்று முன்தினம், சாய் ஹரிவர்ஷனை கண்டித்த தலைமை ஆசிரியர், அவருக்கு டம்மி டி.சி., கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.இதில் மனவருத்தமடைந்த மாணவர், பள்ளி முடிந்ததும் வீடு திரும்பவில்லை. இரவு ஆகியும் மகன் வீடு திரும்பாததால், பதற்றம் அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடினர்.பின், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று காலை, மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி முன் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், மாயமான மாணவர், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது. டி.சி.,யுடன் வீட்டி்றகு சென்றால் பெற்றோர் திட்டுவர் என்பதால், புரசைவாக்கத்தில் திரிந்தபோது, அப்போது போலீசார் அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தது தெரிந்தது. இதையடுத்து சங்கர் நகர் போலீசார், மாணவரை பத்திரமாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.