கோமாரி தடுப்பூசி பணி : செங்கையில் 29ல் துவக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடைகளுக்கு வரும் 29ம் தேதி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்குகிறது. ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம், விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. பால் உற்பத்தி குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மாவட்டத்தில், 2.54 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி துவங்கி ஜன., 28ம் தேதிவரை நடக்கிறது. இதனால், கால்நடை விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு, தடுப்பூசி செலுத்தலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.