சாலை தடுப்பில் ஒளிரும் பட்டை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
செங்கல்பட்டு:பொன்விளைந்தகளத்துார் சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை மைய தடுப்பில் ஒளிரும் எச்சரிக்கை பட்டை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு -- பொன்விளைந்தகளத்துார் சாலை 6 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை வ.உ.சி., நகர், மோசிவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி, செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில் செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையை இணைக்கும் வேண்பாக்கம் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்க பணிகள் நடந்தன. இங்குள்ள, 160 அடி சாலை இருவழிச் சாலையாக பிரிக்கப்பட்டு, சாலை நடுவே சிமென்ட் மைய தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், மைய தடுப்பில் எந்தவித எச்சரிக்கை பலகை மற்றும் இரவில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் விளக்கும் எரியாததால், இருள் சூழ்ந்து உள்ளது. இதனால், சாலை மைய தடுப்பு இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் இரவில் ஒளிரும் எச்சரிக்கை பட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.