பழுதடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
சித்தாமூர்:கடுமையாக சேதமடைந்துள்ள, மருவளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த மருவளம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஜமீன் எண்டத்துார் - விளங்கனுார் இடையே செல்லும் 5 கி.மீ., தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை ஒழவெட்டி, சாமந்திபுரம், சித்தாமூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். சாமந்திபுரம் - மருவளம் இடையே, 700 மீட்டர் துாரம், இந்த சாலை கடுமையாக சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சில நேரம், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கடுமையாக சேதமடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.