உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பல்லாங்குழியான அம்மணம்பாக்கம் சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு

பல்லாங்குழியான அம்மணம்பாக்கம் சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, அம்மணம்பாக்கம் - திருப்போரூர் கூட்டு சாலை, 3 கி.மீ., துாரம் உடையது.இந்த சாலை வழியாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.திருக்கழுக்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு பணிக்குச் செல்ல, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் அம்மணம்பாக்கம் சுடுகாடு பகுதியில் இருந்து திருப்போரூர் சாலை இணைப்பு வரை பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்களின் 'டயர்'கள் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன. தற்போது பெய்து வரும் மழையால், சாலையிலுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக, கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால், உரிய நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு பணி முடித்து செல்லும் போது அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.மேலும், பணி முடித்து வீட்டிற்கு தனியே செல்லும் நபர்களை தாக்கி மொபைல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் சம்பவங்களும், அடிக்கடி நடக்கின்றன.இந்த சாலையில் ஒருபுறம் காப்பு காடுகள் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளது.பொது மக்கள் சிரமத்தை உணர்ந்து, அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !