கடும் சேதமடைந்துள்ள சாலை நீலமங்கலம் கிராமத்தினர் அவதி
சித்தாமூர்:நீலமங்கலம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதால், கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். சித்தாமூர் அடுத்த நீர்பெயர் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட நீலமங்கலம் பகுதியில், நீர்பெயர் - விளாங்காடு சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்குச் செல்ல, 15 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. பராமரிப்பின்றி, நாளடைவில் ஜல்லிகள் பெயர்ந்து, சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், நடந்து செல்லும் பாதசாரிகள், இந்த சாலையில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள நீலமங்கலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.