உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கலெக்டர் அலுவலகம் பகுதியில் பேருந்து நிற்க உத்தரவிட்டும் அலட்சியம்

செங்கை கலெக்டர் அலுவலகம் பகுதியில் பேருந்து நிற்க உத்தரவிட்டும் அலட்சியம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல கலெக்டர் உத்தரவிட்டும், நிற்காமல் செல்வதால், பெண் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.இந்த வளாகத்தில், பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.இந்த அலுவலகங்களுக்கு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மலையடி வேண்பாக்கம் ஐ.டி.ஐ., பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்கின்றன.இங்கிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.இதேபோல பணி முடிந்து வீட்டிறகுச் செல்லும்போதும், மேற்கண்ட நிறுத்தத்திற்கு வந்து பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதனால், அரசு பெண் ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள, பேருந்து நிறுத்தம் பகுதியில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, காஞ்சிபுரம் மண்டல மேலாளருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இந்த உத்தரவையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம். விழுப்புரம் கோட்டம் சார்பாக இயக்கப்படும் அனைத்து மண்டல பேருந்துகளும், கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில், கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரையும், ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும். செங்கல்பட்டு கிளை மேலாளர், உதவி பொறியாளர் ஆகியோர் காலை, மாலை நேரங்களில், தனி கவனம் செலுத்த வேண்டும் என, பொது மேலாளர் ஏப்., மாதம் உத்தரவிட்டார்.அதன்பின் காலை நேரங்களில், ஒரு சில பேருந்துகள் நின்று செல்கின்றன. மற்ற அரசு பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. மாலை நேரங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி, அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை