உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய கட்டட பணியால் துாசி பறந்து மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

புதிய கட்டட பணியால் துாசி பறந்து மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணியால் துாசி பறந்து அவதிப்படும் நோயாளிகள், மறைப்பு ஏற்படுத்தி பாதுகாப்பாக பணி மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, நாள்தோறும் 350க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மாதந்தோறும் ஐந்து முதல் 10 பிரசவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முதியோர், பெண்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். கிராம பகுதிகளில் இருந்து பேருந்தில் வரும் புறநோயாளிகள், சுகாதார நிலையத்தில் உள்ள மரத்தடி மற்றும் கட்டடத்தின் வாசற்படி, வராண்டா பகுதிகளில் அமர்கின்றனர். இந்நிலையில், இந்த சுகாதார நிலையத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் இருந்து மண் மற்றும் சிமென்ட் பயன்படுத்துவதால் பறக்கும் துாசியை கட்டுப்படுத்தும் வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை. கட்டடத்தைச் சுற்றி துணியால் மறைப்பு ஏற்படுத்தாமல் கட்டட பணிகள் நடப்பதால், மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள் துாசியால் அவதிப்படுகின்றனர். இதனால், நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், இங்குள்ள சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மையத்தில், சிமென்ட் மூட்டைகளை அடுக்கி வைத்து, கிடங்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கட்டுமானப் பணிகளுக்கு, மருத்துவமனை பயன்பாட்டுக்காக உள்ள குழாயில் இருந்து தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இதனால், மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, கழிப்பறை மற்றும் இதர பயன்பாட்டிற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், கட்டுமான பணி நடைபெறும் இடத்தைச் சுற்றி, துணியால் மறைப்பு ஏற்படுத்தி, பாதுகாப்பாக பணியை மேற்கொள்ள வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை