அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் பயனின்றி துாங்கும் புதிய மின்விளக்குகள்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பொருத்த வாங்கப்பட்ட புதிய எம்.இ.டி., மின்விளக்குகள், பேரூராட்சி அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டு உள்ளன. பழுதான மின்விளக்குகளை அகற்றி, இவற்றை உடனே பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்டு, 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டு பகுதிகளிலும் உள்ள தெருக்கள், முக்கிய சாலை சந்திப்புகள், பள்ளிகள், கோவில்கள் என, 740க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பம் அமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இவற்றில், ஒரு சில பகுதிகளில் மின்விளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்துள்ளது. இதனால், பழுதான மின் விளக்குகளை அகற்ற, புதிய மின்விளக்குகள் அமைக்க கோரி பகுதிவாசிகள், பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, மின் சிக்கன நடவடிக்கையாக பேரூராட்சி நிர்வாகம், ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த தெரு மின்விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்ற முடிவெடுத்தது.இதையடுத்து நகராட்சி நிர்வாகத் துறை வாயிலாக, 20 வாட்ஸ், 40, 90 மற்றும் 120 வாட்ஸ் ஒளிரும் திறன் கொண்ட எல்.இ.டி., மின்விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஆனால், மூன்றாம் நபர் சான்று பெறுவதற்காக, கொள்முதல் செய்யப்பட்ட மின்விளக்குகள் பெட்டிகளில், அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதால், அங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.எனவே, கொள்முதல் செய்து அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளை, உடனடியாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் பொருத்த, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.