மதுராந்தகம் மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் புது கழிப்பறை
மதுராந்தகம்:மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை பகுதியில், நகராட்சி நிர்வாகம் வாயிலாக, புதிதாக கழிப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் என, 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மருத்துவமனையில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை பழமையானதால், இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.பின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2024-25ம் நிதியாண்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டும் பணி, மதுராந்தகம் நகராட்சி நிர்வாகத்தின் வாயிலாக நடந்து வருகிறது.இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.