செய்தி எதிரொலி சேதமான தைலங்காடு சாலை சீரமைப்பு பணி துவக்கம்
செய்யூர்:செய்யூர் அருகே தையலங்காடு கிராமத்தில், வில்லிப்பாக்கம் - செய்யூர் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, ஒத்திவிளாகம் ஏரியில் இருந்து லாரிகள் வாயிலாக மண் எடுக்கப்பட்டது.லாரிகள் வாயிலாக அதிக அளவில் மண் எடுத்துச் செல்லப்பட்டதால், சாலையின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்தது.பின், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் சார்பாக, கடந்த மே மாதம் சாலை சீரமைக்கப்பட்டது.ஆனால், சாலையை சீரமைத்து, நான்கு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், பல இடங்களில் சாலை மீண்டும் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, தைலங்காடு பகுதியில் சேதமடைந்த சாலை அகற்றப்பட்டு, சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.