செய்தி எதிரொலி அச்சிறுபாக்கம் பள்ளி வளாகத்தில் புதர்கள் அகற்றும் பணி துவக்கம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், சென்னை- - திருச்சி தேசியநெடுஞ்சாலை ஓரம், மார்வர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளியில் பயன்பாடு அற்ற கட்டடங்கள் உள்ள பகுதியில், செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது. இப்பகுதியில், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது.புதர்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், வேம்பு, ஆலமரம், அரசமரம் போன்ற நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை அடுத்து, பள்ளி வளாகத்தில் இருந்த செடி, கொடிகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன.டிராக்டர் வாகனத்தின் வாயிலாக, ஏர் உழுது மண் சமன்படுத்தப்பட்டுள்ளது. இதில், மழைக்காலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என, பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.