உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்வழிப்பாதையில் மொபைல்போன் டவர் கலெக்டர் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்

நீர்வழிப்பாதையில் மொபைல்போன் டவர் கலெக்டர் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்

கூடுவாஞ்சேரி,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் அடுத்துள்ள வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நீர்வழி பாதையை ஆக்கிரமித்து, தனியார் மொபைல்போன் நிறுவனம், 'மொபைல்போன் டவர்' அமைத்துள்ளது.இதை எதிர்த்து, அப்பகுதிவாசிகள் கடந்தாண்டு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் புகார் மனு அளித்தனர்.மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, வண்டலுார் வருவாய் ஆய்வாளர் மற்றும் வண்டலுார் தாசில்தார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அந்த இடம் 'குட்டை வகைப்பாடு நிலம்' என்பதை உறுதி செய்தனர். பின், மாவட்ட கலெக்டருக்கு இதுகுறித்து அறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் தனியார் மொபைல்போன் நிறுவனம் டவர் அமைக்க அனுமதி இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள டவரை அப்புறப்படுத்த வேண்டும் என, வண்டலுார் தாசில்தாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும், இன்னும் அந்த டவர் அகற்றப்படாமல் உள்ளது, அப்பகுதிவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பாரி வள்ளல் என்பவர் கூறியதாவது:தனியார் நிறுவனம் அமைத்துள்ள மொபைல்போன் டவர், நீர்வழி பாதையை ஆக்கிரமித்துள்ளது. இந்த இடம், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் வருகிறது.இந்த டவரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும், வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு, மெத்தனமாக செயல்படுகிறார்.வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகி புகார் மனு அளித்தும், அவர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறார். தனியார் மொபைல்போன் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்நிலை பகுதியில் டவர் அமைத்துள்ள நிறுவனத்திற்கு அபராதம் விதித்து, அந்த டவரை உடனடியாக அகற்ற வேண்டும். டவர் அமைந்துள்ள அந்த இடத்திற்கு, வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுவும் சட்டத்திற்கு புறம்பானது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ