மேலும் செய்திகள்
ஓவர் லோடு லாரிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
18-Jun-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சவுடு மண் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விதிமீறும் இதுபோன்ற லாரிகளுக்கு வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்காமல் மெத்தனமாக இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், 45 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. வண்டலுார் தாலுகாவில், 100க்கும் மேற்பட்ட 'கிரஷர்' எனும் கல் அரைவை ஆலைகள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு, லாரிகளில் ஜல்லி கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கண்ணில் மண்
இதுபோன்று, சிங்கபெருமாள்கோவில் அடுத்த கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து சவுடு மண் எடுக்க, கனிம வளத்துறை அனுமதி வழங்கி உள்ள நிலையில், இங்கிருந்து லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது.சவுடு மண் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடிச் செல்ல வேண்டும் என, குவாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு, கனிம வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அவர்கள் இதை கண்டுகொள்வதில்லை.செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள், அடுக்குமாடி வீடுகள் கட்டவும், வீட்டுமனை பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைக்கும் சவுடு மண் தேவைப்படுகிறது.இதனால், கொண்டமங்கலம் ஏரியிலிருந்து தினமும், 200க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டு, தார்ப்பாய் மூடாமல் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல, மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், ஏரிகளில் இருந்து மண் கொண்டு செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன. குறிப்பாக, செய்யூர் பகுதியில் சித்தாமூர், சவரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் குவாரிகளில் இருந்து ஜல்லி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்திலும், தார்ப்பாய் மூடாமலும் செல்வதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த வாகனங்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, லாரிகளில் இருந்து மண் பரவி கீழே விழுவதால், சாலையில் மண் குவிகிறது.இதுமட்டுமின்றி, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்ணில் மண் விழுந்து, தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி, படுகாயம் அடைகின்றனர்.குறிப்பாக, கொண்டமங்கலத்தில் இருந்து, சிங்கபெருமாள்கோவில் வழியாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு, லாரிகளில் சவுடு மண் இடைவிடாமல் ஏற்றிச் செல்லப்படுகிறது.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய பணிக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வலியுறுத்தல்
இதை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கண்டும் காணாமல் உள்ளனர். மேலும், வட்டார போக்குவரத்து துறையினர் விதிமீறி செல்லும் இதுபோன்ற லாரிகளுக்கு அபராதம் விதித்து வந்தனர். ஆனால், தற்போது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சவுடு மண், எம் - சாண்ட் மணல் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளில் தார்ப்பாய் மூடிச் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில், சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடாமல் சவுடு மண், ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்பவர்கள் மீது, வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. அதன் பின், விதிமீறி தார்ப்பாய் மூடாமல் லாரிகள் சவுடு மண் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். ஆனாலும், இந்த விதிமீறல் தொடர்வது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18-Jun-2025