செண்டிவாக்கம் கிராமத்தில் நெல் நனைந்து சேதம்
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே செண்டிவாக்கம் கிராமத்தில் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே செண்டிவாக்கம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க, கடந்த வாரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அனுமதி வழங்கியது. இந்தப் பகுதியில், நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் துாற்றும் மெஷின் , எடை மெஷின், கோணிப்பைகள் ஏழு நாட்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதுவரை விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் வைத்துள்ளனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் செண்டிவாக்கம், மாத்துார், அகிலி, கூடலுார், ஒரத்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், 20 நாட்களுக்கு மேலாக, கொள்முதல் நிலைய வளாகத்தில் உள்ள களத்து மேட்டில் நெல்லை கொட்டி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்கள் நனைந்து, முளைத்து வருகிறது. தினந்தோறும், விவசாயிகள் நெல்லை காய வைத்து, மீண்டும் பாதுகாத்து வருகின்றனர். மழை பெய்வதால் நெல் நனைந்து வீணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.