உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோணிப்பைகள் இல்லாததால் நெல் கொள்முதல் பணி நிறுத்தம்

கோணிப்பைகள் இல்லாததால் நெல் கொள்முதல் பணி நிறுத்தம்

அச்சிறுபாக்கம்:அனந்தமங்கலத்தில் செயல்படும் மத்திய அரசின் கொள்முதல் நிலையத்தில் கோணிப் பைகள் இல்லாததால், நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, மத்திய அரசின் கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு வாணிப கழகத்தின் வாயிலாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாய நிலங்கள் உள்ளன.இதில் 65,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 21 மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.அதன்படி அனந்தமங்கலத்தில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை, 40 கிலோ எடை கொண்ட, 13,000 நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.தற்போது, கடந்த ஐந்து நாட்களாக, அனந்தமங்கலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கோணிப்பைகள் இல்லாததால், கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், கோடை மழை பெய்து வருவதால், நெல்லை பாதுகாப்பதில் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக அனந்தமங்கலம் கொள்முதல் நிலையத்திற்கு கோணிப் பைகள் அனுப்பி, கொள்முதல் பணியை விரைந்து துவக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !