மாமரத்திலிருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
சென்னை: குன்றத்துார் அடுத்த மாங்காடு அருகே, மா மரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முயன்றபோது தவறி விழுந்து, பெயின்டர் உயிரிழந்தார்.பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன், 54; பெயின்டர். இவர், மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு, நேற்று பெயின்ட் அடிக்க சென்றார்.அப்போது, வீட்டின் அருகே இருந்த மா மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்திருந்த நிலையில், அதை பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்துள்ளார்.இதில், பலத்த காயமடைந்த நீலகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் நீலகண்டன் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த மாங்காடு போலீசார், நீலகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.