மறைமலைநகரில் மகளிர் மேல்நிலைப்பள்ளி புதிதாக துவக்க பெற்றோர் கோரிக்கை
மறைமலை நகர்:மறைமலை நகரில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி துவக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகரின் மையப்பகுதியில், அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இருபாலர் படிக்கும் இப்பள்ளியை பிரித்து, தனியாக மகளிர் மேல்நிலைப்பள்ளி துவக்க வேண்டும் என, பெற்றோர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது: மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலைகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். பெண்களுக்கென இந்த பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி இல்லை. அதனால், 10 கி.மீ., தொலைவில் உள்ள நந்திவரம்- - கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவியரை அனுப்ப வேண்டியுள்ளது. துாரமாக உள்ளதால், தினமும் பேருந்து பிடித்து பள்ளிக்குச் சென்று வர, மாணவியர் சிரமப்படுகின்றனர். எனவே, மறைமலை நகர் அரசு பள்ளியை பிரித்து, தனியாக மகளிர் மேல்நிலைப்பள்ளி துவக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கையை ஏற்று, அரசுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் அறிக்கை அனுப்பி வருகின்றனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. மறைமலை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மூலமாக, 2018ம் கல்வியாண்டில், மகளிர் பள்ளி துவக்க அரசுக்கு, 2 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தியும், இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மகளிர் மேல்நிலைப்பள்ளி இல்லாததால், பலர் தங்களின் பெண் குழந்தைகளை, 10ம் வகுப்புடன் நிறுத்தி விடுகின்றனர். எனவே, பெண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, மறைமலை நகர் பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி துவக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.