கடும் சேதமான அங்கன்வாடி செம்பூரில் பெற்றோர் பீதி
பவுஞ்சூர், பவுஞ்சூர் அடுத்த செம்பூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பழைய ஊராட்சிமன்ற கட்டடத்திற்கு அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இதில் 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கர்ப்பிணியர் தடுப்பூசி, சத்துணவு போன்றவற்றை பெற்று வருகின்றனர்.அங்கன்வாடி மையம் செயல்படும் கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்து, மழைக்காலத்தில் மேல்தளத்தில் தண்ணீர் கசிவதாக கூறப்படுகிறது, மேலும், கழிப்பறை வசதி இல்லாமல், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.