செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
மேல்மருவத்துார்:மேல்மருவத்துாரில், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த கொடி கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அகற்றப்பட்டன.தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜாதி சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர், அதிக அளவில் கொடி கம்பங்கள் வைத்திருந்தனர்.இந்த கொடி கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சாலைகளை மறித்தும் அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜனவரி மாதம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடி கம்பங்களை, 12 வாரங்களுக்குள் தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்டோர் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து நேற்று, மேல்மருவத்துார் காவல் எல்லைக்கு உட்பட்ட ஊனமலை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர், மேல்மருவத்துார் போலீஸ் பாதுகாப்புடன், தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்கள் மற்றும் அனைத்து வகை கம்பங்களை அகற்றினர்.குறிப்பாக, சோத்துப்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கொடி கம்பங்களும் அகற்றப்பட்டு உள்ளன.இதில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், சிமென்ட் பீடங்களை, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக இடித்து தரைமட்டமாக்கினர். சூணாம்பேடு
செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சூணாம்பேடு பகுதியில் வருவாய்த் துறையினர், 'பொக்லைன்' இயந்திம் வாயிலாக பொது இடங்கள், மாநில சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் இருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றி வருகின்றனர்.