பேருந்து நிழற்குடையில் குடிநீர் வசதி செங்கல்பட்டில் பயணியர் கோரிக்கை
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடை பகுதியில், கோடை வெயிலுக்கு முன், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தினமும் புறநோயாளிகள் 3,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவர்கள், நீண்டநேரம் மருத்துவமனை பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையில் காத்திருந்து, பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.இதேபோன்று, செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு, அரசு போக்குவரத்து பணிமனை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில், பயணியர் நிழற்குடைகள் உள்ளன.இங்கு தாம்பரம், காஞ்சிபுரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, மக்கள் பேருந்துகளில் செல்கின்றனர்.இந்நிலையில், பயணியர் நிழற்குடை உள்ள பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாததால், கடைகளில் அதிக கட்டணம் கொடுத்து, தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது.ஏழைகள் தண்ணீர் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம், கோடை வெயிலுக்கு முன், பயணியர் நிழற்குடை பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.