மஸ்துார் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கல்
செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நியமனம் செய்யப்பட்ட, 59 தற்காலிக மஸ்துார் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க, ஒன்றிய குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, 59 தற்காலிக மஸ்துார் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான வருகை பதிவேட்டை, நந்திவரம் கூடுவாஞ்சேரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 565 ரூபாய் வீதம், மொத்த ஊதியம் 8 லட்சத்து 58 ஆயிரத்து 235 ரூபாயை, வட்டார மருத்துவ அலுவலர் வங்கி கணக்கிற்கு, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்க ஒப்புதல் கோரப்பட்டது. இந்த தொகையை வழங்கியதற்கு சமீபத்தில், ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.