உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெருமாட்டு நல்லூர், காயரம்பேடு பகுதிகளில் மின்தடையால் அவதி

பெருமாட்டு நல்லூர், காயரம்பேடு பகுதிகளில் மின்தடையால் அவதி

கூடுவாஞ்சேரி: காட்டாங்குளத்துார் ஒன்றியம், பெருமாட்டு நல்லூர், காயரம்பேடு, ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று முன் தினம் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை, மின் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துாக்கமின்றி சிரமம் அடைந்தனர்.பகுதிவாசிகளின் புகாரை தொடர்ந்து, பத்துக்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்தடை குறித்து ஆய்வு செய்தனர். காயரம்பேடு முதல் திருப்போரூர் வரை, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மின் ஒயர் கடும் வெப்பத்தின் காரணமாக எரிந்து நாசமானதை கண்டறிந்தனர் .அதைத் தொடர்ந்து, புதிய மின் ஒயர்கள் மறைமலை நகரில் இருந்து வரவழைக்கப்பட்டு, சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட மின் ஒயர்கள் அதிகமான நீளத்திற்கு சேதமடைந்ததால், அதை சீரமைத்து, மின் வினியோக வழங்குவதற்கு, காலதாமதம் ஆகும் என கருதினர். இதையடுத்து உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, மாற்று பாதையின் வாயிலாக மின்வினியோகம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். இரவு 12.15 மணிக்கு மின் சப்ளை வழங்கப்பட்டது. இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மின் ஒயர்கள் அதிக வெப்பத்தின் காரணமாக, சேதம் அடைந்ததை தொடர்ந்து, புதிய ஒயர்கள் வரவழைக்கப்பட்டு, பத்துக்கு மேற்பட்ட மின் வாரிய ஊழியர்களை கொண்டு சீரமைக்க பணி நடைபெற்று வருகிறது, ஆனாலும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை முடித்து சீரான மின் வினியோகம் செய்ய வழிவகை செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை