உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காரணை புதுச்சேரி சாலையில் காவல் நிலைய எல்லை குழப்பம்

காரணை புதுச்சேரி சாலையில் காவல் நிலைய எல்லை குழப்பம்

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி சாலையில், இரண்டு காவல் நிலையங்களுக்கான எல்லைப் பிரச்னை குழப்பமாக உள்ளதால், விபத்து உள்ளிட்ட இடர்களில் சிக்கும் பொதுமக்களை மீட்பதில், கால தாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்துள்ளது.தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ், கிளாம்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவ்விரு காவல் நிலையங்களுக்கும் பொதுவான எல்லையாக, ஜி.எஸ்.டி., சாலையில், ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி சந்திப்பு உள்ளது.இந்த சந்திப்பிலிருந்து காரணை புதுச்சேரி ஊராட்சிக்கு, 30 அடி அகல சாலை செல்கிறது. இந்த 30 அடி சாலையில், 1,500 மீ., தூரத்திற்கு, இடது பக்கம் கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், வலது பக்கம் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கும் எல்லையாக ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது, ஒரே சாலை, இரு காவல் நிலையங்களுக்கான எல்லையாக பிரிக்கப்பட்டுள்ளதால், இந்த வழித்தடத்தில் விபத்து உள்ளிட்ட இடர்களில் யாரேனும் சிக்கினால், எந்த காவல் நிலையத்தை தொடர்பு கொள்வது என, பொது மக்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.பகுதிவாசிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து பிரிந்து, காரணை புதுச்சேரி ஊராட்சி நோக்கி செல்லும் இந்த சாலையில், 'மீடியன்' தடுப்பு இல்லை.சாலையில் நடக்கும் விபத்து, தகராறு தொடர்பாக, காவல் உதவி எண்ணிற்கு தகவல் கூறும்போது, அங்கிருந்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.பின், கிளாம்பாக்கம் போலீசார் நேரில் வந்து பார்க்கும்போது இது எங்கள் எல்லை கிடையாது, கூடுவாஞ்சேரி காவல் எல்லை எனக் கூறிச் செல்கின்றனர்.பின், கூடுவாஞ்சேரி போலீசார் வந்து பார்க்கும்போது, இது எங்கள் எல்லை கிடையாது. கிளாம்பாக்கம் போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். இதுபோன்று பலமுறை குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன.இதனால், விபத்து உள்ளிட்ட இடர்களில் சிக்குவோரை மீட்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. தவிர, காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களுக்கும் இந்த எல்லைக் குழப்பம் பற்றிய புரிதல் இல்லை. எனவே, அவர்களுக்கும் பல நேரங்களில் தடுமாற்றம் ஏற்படுகிறது.எனவே, காரணை புதுச்சேரி சந்திப்பிலிருந்து 1,500 மீ., தூரம் வரை, சாலையின் இடது பக்கம் ஒரு காவல் நிலையத்திற்கும், வலது பக்கம் ஒரு காவல் நிலையத்திற்கும் எல்லையாக பிரித்திருப்பதை தவிர்த்து, சாலை முழுதும் ஏதாவது ஒரு காவல் நிலையத்தின் எல்லையாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி