உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாமல்லபுரத்தில் பூம்புகார் விற்பனையகம்... முடங்குகிறது!

 மாமல்லபுரத்தில் பூம்புகார் விற்பனையகம்... முடங்குகிறது!

மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் உள்ள தமிழக அரசின் பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகம், கடந்த 50 ஆண்டுகளாக இயங்குகிறது. பயணியர் குவியும் இன்றைய சூழலில், கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனை படுமோசமாக சரிந்து, படிப்படியாக முடங்கி வருகிறது. இடம் மாற்றப்பட்ட விற்பனையகத்தை மீண்டும் கடற்கரை பகுதிக்கே மாற்ற வேண்டும் என, கைவினை கலைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் சிற்பக்கலை உள்ளிட்ட பாரம்பரிய கைவினைத் தொழில்களில், ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய தொழில்கள் வருங்காலத்திலும் நீடிக்கவும், கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், தமிழக அரசு, கடந்த 1973ல் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஏற்படுத்தியது.கலைஞர்கள் தயாரிக்கும் பல்வேறு கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக, இக்கழகத்தின்கீழ், தமிழகம் முழுதும் 13 பூம்புகார் விற்பனையகங்கள், ஏழு உற்பத்தி மையங்கள் இயங்குகின்றன.சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற மாமல்லபுரத்திலும் விற்பனையகம் மற்றும் கற்சிற்ப உற்பத்தி மையம் ஆகியவை, 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.துவக்கம் முதல், கடற்கரை கோவில் அருகில், தனியார் அறக்கட்டளை இடத்தில் மாத வாடகைக்கு இயங்கியது. கற்சிலை, உலோக சிலை, பிற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.செவ்வாய்க் கிழமை விடுமுறை தவிர்த்து, மற்ற நாட்களில் இயங்கும். வார இறுதி நாட்களில், குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக சில லட்சம் ரூபாய் வரை விற்பனை நடந்து வந்தது.சுற்றுலா மேம்பாட்டால் பயணியர் வருகை அதிகரித்த நிலையில், விற்பனையை மேலும் பெருக்க கருதி, கடந்த 2018ல், அப்பகுதியில் 'கிராப்ட்ஸ் கபே' என்ற உணவகம் துவக்கப்பட்டது.உணவக பகுதியில் சிற்பங்களை காட்சிப்படுத்தி, உணவகம் வரும் பயணியரை கவர்ந்து, கைவினை பொருள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சில நிர்வாக குளறுபடிகளால், உணவகம் கைவிடப்பட்டது.தொடர்ந்து, பயணியரை கவரும் வகையில், கடந்த 2022ல், உள் அலங்கார வேலைப்பாட்டுடன் விற்பனையகம் மேம்படுத்தப்பட்டது.அதே ஆண்டு, தனியார் அறக்கட்டளை நிர்வாகம், மாத வாடகையை உயர்த்தியது. தனியார் சிற்பக்கூடங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை கடைகள் ஆகியவை பெருகிய நிலையில், பூம்புகார் விற்பனை படிப்படியாக குறைந்தது.வாடகையும் உயர்த்தப்பட்ட நிலையில், அதற்கேற்ப வருவாய் இல்லை. இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில், பூம்புகார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'அர்பன் ஹட்' எனப்படும் நகர்ப்புற சந்தைத்திடல் வளாகத்திற்கு, அதே ஆண்டு விற்பனையகம் மாற்றப்பட்டது.கைவினைஞர் வியாபார வாய்ப்பிற்காக அமைக்கப்பட்ட சிறிய கடை அறையில், விற்பனையகம் நடத்துவதற்கேற்ப கட்டட வசதியின்றி, கலைஞர்கள் அவதிப்பட்டனர்.இது ஒருபுறமிருக்க, சிற்ப பகுதியிலிருந்து, 2.5 கி.மீ., தொலைவுக்கு வெளியே, நெடுஞ்சாலை பகுதியில் இவ்வளாகம் உள்ளது. அதில், விற்பனையகம் சாலையிலிருந்து 300 மீ., உட்புறமாக மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ளது.சுற்றுலா பயணியர், சாலையில் செல்லும் பயணியர், பூம்புகார் நிறுவன விற்பனையகம் இயங்குவதை அறிய இயலாத நிலையே உள்ளது. இதனால், தற்போது முற்றிலும் விற்பனை முடங்கியுள்ளது.பல நாட்களுக்கு ஒருமுறை, சில ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதால், நான்காண்டுகளாக பெயரளவிற்கே இயங்கி வருகிறது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயரதிகாரிகளுடன் பார்வையிட்டு, விற்பனையை அதிகரிக்க மேம்பாட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை.எனவே, விற்பனையகத்தை மீண்டும் கடற்கரை பகுதிக்கே மாற்ற வேண்டும் என, கைவினை பொருள் உற்பத்தி கலைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.துறை உயரதிகாரிகள், மாமல்லபுரம் விற்பனையகம் முற்றிலும் முடங்குவதை தவிர்க்க, பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி, கடற்கரை கோவில் பகுதிக்கு அதை மாற்ற வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நடப்பதாக குற்றச்சாட்டு

கடற்கரை கோவில் அருகில், பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இதை மாற்றினாலே, விற்பனை களைகட்டும். தனியார் கடற்கரை விடுதி நிறுவனம், கட்டட அங்கீகார அனுமதிக்காக, கடற்கரை கோவில் அருகில், பொது திறவிட பகுதியாக அளிக்கப்பட்ட 4.5 ஏக்கர் இடமே, பேரூராட்சிக்கு சொந்தமாக உள்ளது.இங்குள்ள கட்டடத்தை, தனியார் கைவினைப் பொருட்கள் விற்பனை கடைக்கு, பேரூராட்சி நிர்வாகம் வாடகைக்கு அளித்துள்ளது. இக்கடை நீண்டகாலமாக அரசு இடத்தில் இயங்கும் நிலையில், அரசு நிறுவன கடை என்றே கூறி, பொருட்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.இவ்வளாகத்தில், பூம்புகார் விற்பனையகத்திற்கு இடம் ஒதுக்குமாறு, உயரதிகாரிகளிடம் முறையிட்டும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மாற்ற எதிர்பார்ப்பு

விற்பனை சரிவு குறித்து, பூம்புகார் நிறுவன அலுவலர் ஒருவர் கூறியதாவது:எங்கள் கற்சிற்ப உற்பத்தி பிரிவில், சிற்பக்கலைஞர்கள் ஏராளமாக பணிபுரிந்துள்ளனர். அப்போது, வெளிநாட்டிற்கும் கற்சிலைகள் ஏற்றுமதி செய்துள்ளோம்.தற்போது, சில சிற்பிகளே உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரே நிதியாண்டில், அதிகபட்சம் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளோம். இடம் மாற்றப்பட்ட பின், கடந்த நிதியாண்டு 10 லட்சம் ரூபாயும், நடப்பு நிதியாண்டின் நான்கு மாதங்களில், இரண்டு லட்சம் ரூபாயும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.சுற்றுலா பயணியர் வந்துசெல்லும் கடற்கரை கோவில் அருகில் எங்கள் விற்பனையகம் இயங்கினால், நிச்சயம் வருவாய் அதிகரிக்கும். கைவினைஞர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை