தாம்பரம்: தாம்பரம் இரும்புலியூரில், போக்குவரத்து போலீஸ் - தனியார் நிறுவனம் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், 'ப்ரீகாஸ்ட்' சுரங்கப்பாதையில் வாகனங்களை அனுமதிப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தாம்பரம், இரும்புலியூர் பாலத்தில், 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, அங்கு ரயில்வே பாலம் மற்றும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வாகனங்கள் 'யு - டர்ன்' எடுத்து செல்ல வசதியாக, 'ப்ரீகாஸ்ட்' ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையில், 200 அடி நீளத்திற்கு, ஐந்து ரெடிமேட் பெட்டிகள் கொண்ட வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததை அடுத்து, இச்சுரங்கப்பாதையில் நேற்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என, பணியை மேற்கொண்ட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், நேற்று திறக்கப்படவில்லை. அதே நேரத்தில், இச்சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாதை, ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் திறக்கப்படாதது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, 'வண்டலுாரில் இருந்து வந்து, பெருங்களத்துார் மேம்பாலம் ஏறும் இடத்தில், சுரங்கப்பாதைக்கு செல்லக் கூடிய வழிகாட்டி பலகை நட வேண்டும். பழைய ஜி.எஸ்.டி., சாலையில் ஒட்டுப்பணி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தோம். அவை இதுவரை செய்யப்படவில்லை. அப்படியிருக்கையில், சுரங்கப்பாதையில் எப்படி வாகனங்களை அனுமதிக்க முடியும்' என்றனர்.