ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் புனரமைப்பு
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.விளம்பூர், கெங்கதேவன்குப்பம், பனையூர், கப்பிவாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பொது மருத்துவம், மகப்பேறு, தடுப்பூசி, நோய்த்தடுப்பு என, பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர்.40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில், புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்தது.பராமரிப்பின்றி, நாளடைவில் இந்த கட்டடத்தின் மேல்தளத்தில் சிமென்ட் கான்கிரீட் கலவை உதிர்ந்து, மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.பொதுப்பணித் துறை சார்பாக புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தை புனரமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்காலிகமாக அருகே உள்ள மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.தற்போது, பழுதடைந்த கட்டடத்தின் மேல் தளம் முழுதும் இடித்து அகற்றப்பட்டு, புதிய தளம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், குழாய்களை சீரமைத்து, வண்ணம் பூசி புனரமைக்கப்பட்டு உள்ளது.