உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் சிக்கல்! பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் கடும் அவதி

செங்கல்பட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் சிக்கல்! பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் 2024ல் தொடங்கிய பாதாள சாக்கடை திட்டப்பணி 35 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதால், பகுதிமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதேவேளையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கிய இடத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், பணி முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 11,285 வீடுகளில் 64,138 பேர் வசித்து வருகின்றனர். நகரில், ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, பெரியமணியக்கார தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், குண்டூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், 485 தெருக்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய்களில் விடப்படுகிறது.

தொற்று நோய்

இது, கொளவாய் ஏரியில் கலக்கிறது. இங்கிருந்து கழிவுநீர், பாலாற்றுக்கு செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. தவிர, நகரின் பல சாலைகளில் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தி பெருகி, நகரவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, பாதாள சாக்கடை திட்டம் அமைக்க கோரி, பொதுமக்கள், அரசிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்காக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் 2020ல் 194 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பினர். 23 - 24ம் நிதியாண்டில், 206.18 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. அதே ஆண்டில் திருத்திய மதிப்பீடாக 188.25 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. மத்திய அரசின் துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில் 63 கோடி ரூபாயும், தமிழ்நாடு அர்பன் டெவலப்மென்ட் வங்கி கடன் மூலம் 62.48 கோடி ரூபாய், தமிழக அரசு 62.47 கோடி ரூபாய் என, மொத்தம் 188.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2024ல் பணி தொடங்கியது. அண்ணா நகர், வேதாசலம் நகர், அழகேசன் நகர், அனுமந்தபுத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில், சாலையில் குழாய் அமைக்கும் பணி முடிந்துள்ளது. வீட்டு இணைப்புகள் 11 ஆயிரத்து 824ல் 2,405 இணைப்புகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பணியால், அண்ணாநகர், அழகேசன் நகர், டாக்டர் வரதராஜன் தெரு, குண்டூர் ஆர்.வி., தெரு, திருவள்ளூர் தெரு உள்ளிட்ட 28 இடங்களில் சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க 2025 - 26ம் ஆண்டு 6.05 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது. வேதாசலம் நகரில் நான்கு இடங்களில் மட்டும், தார்சாலை போடப்பட்டது. மற்ற இடங்களில், சாலை பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சாலை குண்டும் குழியுமாக மாறி, வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

வருவாய்த்துறை

இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மேய்க்கால் வகைப்பாடு நிலத்தை, வருவாய் துறை ஒதுக்கீடு செய்தது. இதற்கான அனுமதி பெற, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் 2027க்குள் முழு பணியும் முடிக்க வேண்டிய நிலையில், 35 சதவீத பணிகளே முடிந்துள்ளதால், திட்டத்தை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி, 45 சதவீதத்திற்கு மேல் முடிந்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ஆத்துார் பகுதியில், மேய்க்கால் வகைப்பாடு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அதற்கு தீர்வு கண்ட பின், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை