டாஸ்மாக்கை முற்றுகையிட்டு கீழ்மருவத்துாரில் போராட்டம்
மேல்மருவத்துார்:செய்யூர் வட்டம், மேல்மருவத்துார் அருகே உள்ள கீழ்மருவத்துாரில், அரசு மதுபான கடை எண்: 4361 இயங்கி வருகிறது.கீழ்மருவத்துாரில் இருந்து வெங்கடேசபுரம் செல்லும் சாலை ஓரம், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த மதுபான கடை செயல்பட்டு வருகிறது.சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள், இங்கு மது வாங்கி சென்று, அப்பகுதியிலேயே குடித்துவிட்டு, சாலையில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்துவதுடன், போதை தலைக்கேறிய பின், பாட்டில்களை உடைத்தும், அங்கேயே பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பைகள், வாட்டர் பாட்டில்களை போட்டுவிட்டு செல்வதால், விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது.இதனால், மதுபானக் கடையை வேறு இடத்தில் மாற்றி அமைக்கக்கோரி, அப்பகுதிவாசிகள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்து வந்தனர்.ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நேற்று அரசு மதுபான கடையை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த மேல்மருவத்துார் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, பெண்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, கடையை மாற்று இடத்தில் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என, பெண்கள் தெரிவித்தனர்.