உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முறையாக இயக்கப்படாத மாநகர பேருந்து கீரப்பாக்கத்தில் சிறை பிடித்து போராட்டம்

முறையாக இயக்கப்படாத மாநகர பேருந்து கீரப்பாக்கத்தில் சிறை பிடித்து போராட்டம்

கீரப்பாக்கம்:கீரப்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு, புதிதாக துவக்கப்பட்ட மாநகர பேருந்து முறையாக இயக்கப்படாததால், அப்பகுதி மக்கள் நேற்று காலை, பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீரப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 1,760 வீடுகளில், 5,000க்கும் மேற்பட்டோர் புதிதாக குடியேறி உள்ளனர். இவர்கள் தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர உரிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர, கடந்த ஓராண்டாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து வண்டலுார், நல்லம்பாக்கம் கூட்ரோடு வழியாக, கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு, தடம் எண் '55என்' என்ற மாநகர பேருந்து சேவை, கடந்த வாரம் துவக்கப்பட்டது. ஆனால், துவக்கி வைக்கப்பட்ட சில நாட்களிலேயே, அந்த பேருந்து சரிவர இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பேருந்தை சரியான நேரத்தில், நிரந்தரமாக இயக்க வலியுறுத்தி, நேற்று காலை, தடம் எண் '55என்' மாநகர பேருந்தை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, அறிந்த மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வந்து, அவர்களிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கண்டிகையிலிருந்து குமிழி செல்லும் வழித்தடத்தில், முருகமங்கலத்தில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 1,260 வீடுகள் உள்ளன. அந்த பகுதி வழியாக, ஐந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், 1,760 வீடுகள் உள்ள கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு, ஒரு மாநகர பேருந்து கூட முறையாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் சென்று வருவோர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, தடம் எண் '55என்' மாநகர பேருந்தை எங்கள் பகுதிக்கு நிரந்தரமாக, உரிய கால அட்ட வணைப்படி இயக்க வேண்டும். இல்லாவிட்டால், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை