செங்கையில் தொழிற்கடன் 1,852 பேருக்கு வழங்கல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின், மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கல்வி கடன் முகாம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாக, ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், நேற்று நடந்தது. இதில், கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, 1,852 நிறுவனங்களுக்கு, 476.7 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்கடன், கல்வி கடன்களை வழங்கி பேசியதாவது:செங்கல்பட்டு மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 2024- - 25ம் ஆண்டில், 1,13,553 நிறுவனங்களுக்கு, 5,115.7 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த ஏப்., 1ம் தேதி முதல் செப்., 30ம் தேதி வரை, 33,407 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 3,143.04 கோடி ரூபாய் தொழில் கடனாக வழங்கி உள்ளோம். இம்முகாமில், 16 பேருக்கு தொழிற்கடனாக 4.18 கோடி ரூபாயும், கல்வி கடனுதவியாக 206 பேருக்கு, 16.67 கோடி ரூபாயும், அரையாண்டு வரை, 2,803 பேருக்கு, 81.45 கோடி ரூபாய் கல்வி கடனாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தொழில் மைய மேலாளர் வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.