உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி மந்தம்

மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி மந்தம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில், மழைநீர் கால்வாய் துார்வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், அண்ணா நகர் மற்றும் திம்மாவரம் ஊராட்சியில் மஹாலட்சுமி நகர், காயரம்பேடு, வண்டலுார் தாலுகாவில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள மஹாலட்சுமி நகரில் வெள்ளம் சூழும். தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்துார் மண்டலத்தில் பாரி நகர், காமாட்சி நகர், பம்மல் பகுதியில் எம்.ஜி.ஆர்., நகர், எஸ்.பி.ஐ., காலனி, மூங்கில் ஏரி பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும். செம்பாக்கம் பகுதியில் துரைசாமி நகர், ராமகிருஷ்ணாபுரம், மறைமலை அடிகளார் தெரு என, மொத்தம் 32 பகுதிகளில், பருவ மழையின் போது தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படும். இதேபோல, மதுராந்தகம், மறைமலை நகர், மாமல்லபுரம், அச்சிறுபாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளிலும் மழை நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதிகளில், வடகிழக்கு பருவ மழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு பணிகளை, கடந்த செப்., மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென, அனைத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டிருந்தார். ஆனால், மழைநீர் கால்வாய்கள் துார்வாரும் பணிகள், மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. எனவே, இப்பணிகளை, மழை துவங்குவதற்கு முன் முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பருவ மழைக்கு முன், அனைத்து பணிகளும் முடிக்கப்படும். சினேகா, கலெக்டர், செங்கல்பட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ