அதிவேகமாக வந்த கார் மோதி பைக்கில் சென்ற விவசாயி பலி ஓ.எம்.ஆர்., சாலையில் உறவினர்கள் மறியல்
திருப்போரூர், :ஓ.எம்.ஆர்., சாலை, தண்டலம் பகுதியில், பைக் மீது கார் மோதிய விபத்தில், விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 45; விவசாயி.இவர், திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை அழைத்து வர, நேற்று மாலை 3:30 மணியளவில், ஓ.எம்.ஆர்., சாலையில் பைக்கில், திருப்போரூர் நோக்கி சென்றார்.அப்போது, தண்டலம் கிராமத்தில், அந்த வழியாக வளைவுப் பகுதியில், அதிவேகமாக வந்த கார், சாலை மையத்தடுப்பில் உரசி, இவரது பைக் மீது மோதியது.இதில், சுரேஷ்குமார் துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.அந்த காரும், சாலையோரம் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு, விவசாய நிலத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.காரில், 19 வயது முதல் 20 வயது வரையில் இரு மாணவன், நான்கு மாணவியர் என, 6 பேர் இருந்துள்ளனர்.இதில், மாணவி ஒருவர் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரிந்தது. இதில், அவர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தோர் மீட்டு, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காரில் வந்த மாணவ, மாணவியர் படூரில் - உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.கல்லுாரி முடிந்து மாமல்லபுரம் சென்று திரும்பிய போது, இந்த விபத்து நடந்துள்ளது. இதற்கிடையில், விபத்தில் இறந்த சுரேஷ்குமாரின் உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது சடலத்தை ஓ.எம்.ஆர்., சாலையின் நடுவே வைத்து, மறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய கல்லுாரி மாணவியர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என, கோஷமிட்டனர். இதையடுத்து, திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.