செம்பரம்பாக்கம் கால்வாய் சேரும் இடத்தில அடையாறு ஆறு விரிவாக்கத்தால் நிம்மதி
திருநீர்மலை:மண்ணிவாக்கம் அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, வரதராஜபுரம், முடிச்சூர், வெளிவட்ட சாலை, திருநீர்மலை, கவுல்பஜார் வழியாக சென்று, பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய், திருநீர்மலை அருகே அடையாறு ஆற்றுடன் சேர்கிறது.மழைக்காலத்தில், செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர், இந்த கால்வாய் வழியாக வெளியேறி, திருநீர்மலை அருகே அடையாற்றில் கலந்து, கடலுக்கு செல்லும்.இந்த கால்வாய் சேரும் இடத்தில், அடையாறு ஆற்றின் அகலம், 137 அடி அகலத்தில் இருந்தது.கடந்த காலங்களில், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கும் போது வெளியேறும் உபரி நீர் மற்றும் அடையாறு ஆறு வழியாக வரும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து, அந்த கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும்.அந்த சமயத்தில் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அடையாறு ஆறு வழியாக வரும் தண்ணீர், திருநீர்மலை அருகே தடைப்பட்டு, பின்நோக்கி சென்று குடியிருப்புகளை சூழ்ந்தது.கால்வாய் அகலமாக இல்லாததாலே இப்பாதிப்பு ஏற்பட்டது. திருநீர்மலை, அனகாபுத்துார், பம்மல், முடிச்சூர், வரதராஜபுரம், கிஷ்கிந்தா சாலை உள்ளிட்ட பகுதிகள், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.ஒவ்வொரு மழைக்கும் இப்பிரச்னை இருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் சேரும் இடத்தில், அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டனர்.இதையடுத்து, கடந்த ஆண்டு, 137ல் இருந்து 393 அடியாக அகலப்படுத்தப்பட்டது. மேலும், கரை உடைப்பை தடுக்க, 1,400 மீட்டர் துாரத்திற்கு தடுப்பு சுவரும் கட்டப்பட்டது.இதன் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த மழையில், அந்த இடத்தில் தண்ணீர் தேங்கவில்லை.அதே நேரத்தில், தொடர்ந்து கனமழை பெய்து, அடையாறு ஆற்றில் முழு அளவிற்கு தண்ணீர் ஓடினால் மட்டுமே, அடையாறு ஆறு அகலப்படுத்திய நடவடிக்கை கைகொடுத்ததா, இல்லையா என்பது தெரியும்.