சமூக நலக்கூடம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்
ஊரப்பாக்கம்,:ஊரப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூட பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பகுதிவாசிகளின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஏழை, எளிய மக்கள் இல்ல நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என, நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த 2023ல், மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 78 லட்சம் ரூபாய் செலவில், 2,400 சதுர அடி பரப்பில், 'மகிளா மன்றம்' என்ற பெயரில் சமூக நலக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.ஊரப்பாக்கத்திலிருந்து காரணை புதுச்சேரி செல்லும் சாலை அருகே, அரசுக்குச் சொந்தமான காலி இடத்தில், இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.ஆனால், பணிகளில் பெரும் சுணக்கம் நிலவியதால், இரண்டு ஆண்டுகள் முடிந்தும், தற்போது வரை கட்டுமான பணிகள் நிறைவு பெறவில்லை.எனவே, பணிகளை விரைந்து முடித்து, சமூக நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.