கழிவுநீர் கால்வாய் அமைத்த பின் சாலை அமைக்க வேண்டுகோள்
அச்சிறுபாக்கம்,அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், 15வது வார்டுக்கு உட்பட்டு மேட்டுகிராமம் உள்ளது. இங்கு, 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மேட்டுகிராமம் 1வது தெரு, 2வது தெருவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக, சாலை மிகவும் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத சூழலில் இருந்தது.சிமென்ட் சாலைகள் இருந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளது.மேலும், அப்பகுதியில் வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி ஆகிறது.அதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே, இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து, அதன் பின் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள், பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.அதன்படி, அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15வது வார்டு பகுதியில், 2024 -- 25ம் நிதியாண்டில், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக சிமென்ட் சாலை அமைக்க, முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைத்த பின், சிமென்ட் சாலை அமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேட்டுகிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.