பொத்தேரியில் ஓட்டுச்சாவடி மாற்ற வேண்டுகோள்
செங்கல்பட்டு, பொத்தேரியில் ரயில் கடவுபாதையை கடந்து சென்று, ஓட்டுப்போடுவதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, ஓட்டுச்சாவடியை இடத்தை மாற்ற வேண்டும் என, அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், 1,200 க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீராய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் சப்- கலெக்டர் மாலதி ெஹலன் தலைமையில், செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள், வெளியூர் சென்றவர் பெயர்கள், நீக்கம் செய்யாமல் உள்ளது. இந்த பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைமலைநகர் அடுத்த, பொத்தேரி பகுதியில் உள்ள, ஓட்டுச்சாவடிக்கு செல்வதற்கு மக்கள், ரயில் கடவுபாதையை கடந்து செல்கின்றனர். இதனால், ஓட்டுச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். நடவடிக்கை எடுக்கப்படும் என, சப்- கலெக்டர் மாலதி ெஹலன் தெரிவித்தார்.