சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கோரிக்கை
கூவத்துார்:கூவத்துாரில், சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூவத்துார் ஊராட்சி யில் அடங்கிய புதுகாலனி, பழைய காலனி, கீழார் கொல்லை, ஆலங்குப்பம், நாவாக்கால் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 1,300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதி சாலைகளில், மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் இவற்றை கட்டி வைத்து பராமரிக்காததால், போக்குவரத்துக்கு இடையூறாக, விபத்து ஏற்படுத்தும்படி திரிகின்றன. சில நேரங்களில், மாடுகள் சாலை நடுவே படுத்து ஓய்வெடுப்பதால், வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளில், மாடுகளும் சிக்கி உயிரிழக்கின்றன. கூவத்துார் பகுதியில், மாடுகளால் பெரும் விபத்து ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து, மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.