நியாய விலை கடை கட்டடம் பழுது இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே ஒரத்தி ஊராட்சியில், சமுதாய நலக்கூடம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது.300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், இந்த நியாய விலைக்கடையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கட்டடம் பழுதடைந்து, சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.அதனால், பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டு, நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.தற்போது, பழைய கட்டடம் பயன்பாடின்றி உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.பள்ளிக்கூடம் அருகே பழைய கட்டடம் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.அல்லது கட்டடத்தை சீரமைத்து, ஊராட்சியின் வருவாய்க்கு வழிவகை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.