அபாய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக அமைக்க கோரிக்கை
மேலமையூர்:மேலமையூர் ஊராட்சியில், அபாய நிலையிலுள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சி காமராஜர் நகரில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் துாண்கள் பலவீனமடைந்து விரிசல் விட்டு, நீர்த்தேக்க தொட்டி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.இதன் வழியாக தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் சென்று வருகிறனர். இதனால் விபத்து ஏற்படும் முன், பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி நிர்வாகத்திடம், கிராமவாசிகள் மனு அளித்தனர்.இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அதிருப்தியில் உள்ளனர்.எனவே, கிராமவாசிகள் நலன் கருதி, இங்குள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிய நீர்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.