| ADDED : டிச 08, 2025 06:59 AM
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில், சாலை வளைவில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் - பாலுார் இடையேயான 13 கி.மீ., துார சாலையை பாலுார், ரெட்டிபாளையம், வெண்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரெட்டிப்பாளையம், பாலுார் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு லோடு ஏற்றிச்செல்லும் லாரிகள், அதிக அளவில் இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலை செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில், அபாய சாலை வளைவு உள்ளது. வாகனங்கள் அதிவேகத்தில் வரும்போது, இந்த இடத்தில் உள்ள வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த அபாய வளைவு பகுதியில் இரும்பு தடுப்புகள் வைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.