| ADDED : பிப் 26, 2024 12:36 AM
செங்கல்பட்டு : மேலமையூர் ஊராட்சி பகுதியில், செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலம் அமைந்து உள்ளது. இதன் வழியாக, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன.மேலமையூரில், திருக்கழுக்குன்றம் சாலை அருகில், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. இங்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வழியாக, மண் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மற்றும் டாரஸ் லாரிகள் அதிவேகமாக, மேம்பாலப்பகுதியில் செல்கின்றன.கடந்த 21ம் தேதி, இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதியதில், பெண் இறந்தார். இந்த விபத்துகளை தவிர்க்க, மேம்பாலப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.