செங்கல்பட்டு மருத்துவமனையில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு தினமும் புறநோயாளிகள் பிரிவில், 3,000க்கும் மேற்பட்டோரும், உள்நோயாளிகளாக 1,700க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் சிரமப்படுகின்றனர். வெளியில் உள்ள கடைகளில், அதிக கட்டணம் கொடுத்து குடிநீர் வாங்குவதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. அத்துடன், குடிநீர் வாங்க மருத்துவமனைக்கு வெளியே உள்ள கடைக்கு செல்ல, விபத்து அபாயத்துடன் சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, மருத்துவமனை வளாகத்தில், முக்கிய வார்டுகள் உள்ள பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் வலியுறுத்தினர். ஆனால், இன்னும் இந்த மருத்துவமனை வளாகத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. எனவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.