பயன்பாடற்ற கால்நடை மருந்தகம் விபத்து அபாயத்தால் அகற்ற கோரிக்கை
அச்சிறுபாக்கம்,-சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது, நெற்குணம் ஊராட்சி. இப்பகுதியில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது.நெற்குணம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது.கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு வலுவிழந்த நிலையில், சில ஆண்டுகளாக இக்கட்டடம் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டது.நெற்குணம் ஊராட்சிக்குட்பட்ட கடப்பேரி பகுதியில், புதிதாக கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.பழைய கால்நடை மருந்தகக் கட்டடம் வலுவிழந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இக்கட்டடம் பயன்படுத்தப்படாததால், மழைநீர் சூழ்ந்து, கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது. விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது.எனவே, பழைய கால்நடை மருந்தக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.