தேவராஜனார் தெருவில் சேதமான சிறுபாலத்தை சீரமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு தேவராஜனார் தெருவில், உடைந்துள்ள சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சி வேதாசலம் நகரில், தேவராஜனார் தெருவில், சிறுபாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள் என, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த சிறுபாலம் உடைந்தது. இவ்வழியாக செல்லும் நகரவாசிகள், விபத்து நடக்காமல் இருக்க, மரக்குச்சிகளை போட்டு மறைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்கிறது. அந்த சமயத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது, சிறுபால பள்ளத்தில் விழும் அபாய சூழல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்பவர்கள், விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த சிறுபாலத்தை சீரமைக்கும்படி, நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், அலட்சியமாக உள்ளனர். இப்பகுதியில் பெரிய விபத்து நடப்பதற்குள், சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.